கருவில் சுமந்து பெற்றெடுத்து தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி, பாசத்தையும், நேசத்தையும் உணவாய் ஊட்டி தன் குழந்தையை வளர்க்கும் அந்த தாய் மடி எந்த அளவுக்கு பாசத்தால் பிணைந்துள்ளது என்பது வீரம்மாள் என்ற தாய் தன்னையே கொடுத்து உணர்த்தியுள்ள சம்பவம் உள்ளத்தை நெகிழ வைக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மூங்கில் பாளையத்தில் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு திலகவதி என்ற ஒரே மகள். குடும்ப பிரச்சனையால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே தனது கணவரை பிரிந்த வீரம்மாள் மகள் திலகவதி ஐந்து வருட குழந்தையாக இருக்கும் போதே தனியாக வந்து இந்த 20 வருடங்களாக தனது தம்பி ஒருவர் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். வீரம்மாள் விசைதறிப்பட்டறையில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து மகளுடன் குடும்பம் நடத்தி வந்தார். தனியாக கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தாலும் தனது மகளை முடிந்த அளவுக்கு படிக்க வைத்தார்.
கணவரை பிரிந்த நிலையிலும் தனது எதிர்காலமே மகளோடுதான் என மகள் மீது தீராத பாசத்தால் இருந்துள்ளார். மகள் திலகவதிக்கு திருமண வயது வந்தது. திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். மகளுக்கு ஏற்ற பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் திலகவதிக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான மகள் தனது கணவருடன் அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஒரு நாளும் மகளை பிரிந்து வாழ்ந்திராத தாய் வீரம்மாள் தனியாக தனது வீட்டில் மகள் நினைவுகளுடன் கண்ணீரில் தத்தளித்தார். பெத்த மனம் பித்து என்பதை போல ஒவ்வொரு நாளும் மகளின் மீதான பாச வேதனை வீரம்மாளை வாட்டியது. அதிலிருந்து வீரம்மாளால் விடுபடவே முடியவில்லை. திருமணமான மகள் இனி அவன் கணவனோடு இருப்பது தானே நியாயம் அப்படியென்றால் நான் தனியாக எப்படி வாழ முடியும் மகள் இல்லாத நிமிடங்களை கடக்கவே முடியவில்லையே என்று வாடிய வீரம்மாளின் பாசப் பைத்தியம் ஒரு முடிவை எடுத்தது. நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பகுதி மக்களே கண்ணீரும், கதறுலுமாக மகள்மீது பாசம் யாருக்கு தான் இல்லை. ஆனால் வீரம்மாள் உயிரை கொடுத்தது கொஞ்சமும் நியாயமில்லை. அந்த அப்பாவி தாய் மகளே உலகம் என்று வாழ்ந்து விட்டாள் யாரிட்டும் மனம் விட்டு பேசவில்லையே... எனவேதனையுடன் கூறுகிறார்கள்.