கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அங்கு மீட்பு பணிகள், சீரமைப்பு பணிகள் உட்பட பல பணிகள் நடந்து வருகின்றன. 461 முகாம்களில் கிட்டதட்ட 82,000 பேர் தங்கியுள்ளனர். பலகட்சி தலைவர்கள் தங்களின் தொண்டர்களை மீட்பு பணியில் ஈடுபடும்படி தெரிவித்துள்ளனர். முதல்வர் பேரிடர் மேலாண்மை, மீட்பு குழுவை துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் உணவு பொட்டலங்களை வழங்கினர். அதில் ரஜினியின் முகத்தையும், ‘ரஜினி மக்கள் மன்றம் நாகை மாவட்டம்’ என்ற சொற்றொடரையும் அச்சடித்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே சென்னை வெள்ளத்தின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்பட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட நிவாரண பொருட்கள் கொடுத்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தினர் இப்படி செய்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.