மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளப்பட்டி புதூரில் நேற்று முன்தினம் (16.03.2021) மந்தை திடலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சிலையை போலீசார் அகற்ற முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்நிலையில் 15 பேர் மீது பொது சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற முயன்றார். அவரை போலீசார் ஊரின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். பின்னர் கருணாஸ் அளித்த பேட்டியில், “சமாதானமாக பேச வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கிராம மக்களைத் தாக்கி சிறையில் அடைத்துள்ளது.
சீர்மரபினருக்கு எதிரான இடஒதுக்கீடு, ஜெயலலிதா அறிவித்த அரசாணையை அமல்படுத்தாதது என மாற்று ஜாதியினரை முக்குலத்தோருக்கு எதிராக இந்த அரசு திருப்ப பார்க்கிறது. இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அரசியல் அனாதையாக்கப்படுவார். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அதிமுக ‘ஆல் அவுட்’ என்ற நிலையை முக்குலத்தோர் சமுதாயம் உருவாக்கும்” என்றார்.