விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஏமப்பூர். இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டம் என்று கூறப்படும் 100 நாள் வேலை திட்டப் பணி கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு ஊரடங்கு உத்தரவு தளர்த்தபட்டதன் காரணமாக இந்த பணி மீண்டும் சில நாட்களாக துவங்கியுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்த வேலையில் பணிபுரிந்து வந்த 100க்கு மேற்பட்டவர்கள் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஊராட்சி செயலாளர் எங்களுக்கு சரியாக வேலை வழங்குவது இல்லை. வேலை செய்யாதவர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடு நடப்பதாகவும் அதை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது.