கோடை காலத்தையொட்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது.
இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது.