தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழக அரசு மூலதன மானிய நிதி 2023-2024 ஆண்டு கேப்பிட்டல் கிரவுண்ட் பண்ட் திட்டத்தின் கீழ் ரூபாய் 11 கோடி 10 லட்சம் மதிப்பீட்டிலான ஸ்ரீ ரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழா ஸ்ரீ ரங்கம் அரசு மருத்துவமனை எதிரே இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஸ்ரீ ரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். ஸ்ரீ ரங்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியாக தரைதளத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தவும், 22 கடைகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு இருக்கை 108 எண்ணிக்கையில் அமைய உள்ளது. அதேபோல் முதல் தளத்தில் 260 நபர்கள் அமரும் வகையில் சிறிய திருமண மண்டபமும் கட்டப்பட உள்ளது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. இரா. வைத்தியநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.