கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை, தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை, அரசின் அறிவிப்பானது சோர்வடையச் செய்ததோடு, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையிலும் உள்ளது.
25 % மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும், ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். தேர்வில் பங்கேற்றால்தான், மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைக்கும். சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை தேர்வு மூலம்தான் பிரதிபலிக்கும்.
சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு, அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்தது தவறு. அரசிடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை கைவிடக்கோரி மனு அளித்தும் பலனில்லை அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதே கோரிக்கையுடன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று மதியம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ராம்குமார் வழக்கு விசாரணைக்கு வரும்போது, தனது மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டுமென பாலகுருசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.