சமூக வலைதளங்களில் பெண்களின் ஆபாசப் படங்களை ‘அப்லோட்’ செய்வது பெரும்பாலும் ஆண்கள்தான். விருதுநகரிலோ, பெண் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பள்ளி ஆசிரியை.
அந்த ஆசிரியை ஏன் இப்படி செய்தார்?
விருதுநகர் – சிவகாசி சாலையில் இருக்கும் பள்ளியில் பணிபுரியும் முதல்வரையும் துணை முதல்வரையும் தவறாக சித்தரித்து ஒரு படத்தை சமூகவலைதளங்களில் ‘யாரோ’ பதிவேற்றியிருந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளியின் துணை முதல்வர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார். நிர்வாகமோ, காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியது.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜனை சந்தித்து துணை முதல்வர் முறையிட்டார். தன்னையும் பள்ளி முதல்வரையும் அவதூறாக சித்தரித்து மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் போட்டோ வெளியிட்டுள்ளதாக புகார் அளித்தார். இந்தப் புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே அந்தப் பள்ளியில் வேலை செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியை தான் இவ்வாறு செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். தனக்குக் கிடைக்காத துணை முதல்வர் பொறுப்பு அவருக்கு கிடைத்ததனால் ஆத்திரத்தில் செய்த காரியம்தான் இதுவென்று அறிந்த போலீசார், தொடர்ந்து அவரை விசாரித்து வருகின்றனர்.
மார்பிங் செய்து படத்தை வெளியிட ஆசிரியைக்கு நிச்சயம் இன்னொருவர் உதவியிருப்பார் என்று பள்ளியில் பணிபுரியும் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதல்வரும்தானே அவதூறுக்கு ஆளாகியிருக்கிறார்? அவர் ஏன் புகார் அளிக்க முன்வரவில்லை? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
நாம் அந்த பள்ளியைத் தொடர்புகொண்டோம். பள்ளி முதல்வரின் கைபேசி எண்ணைத் தந்தனர். அவருடைய செல்போன் தொடர்ந்து ‘ஸ்விட்ச்-ஆப்’ நிலையிலேயே இருந்தது.