
நெல்லையில் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாநகர் காட்சி மண்டபம் அருகே இன்று (18/03/2025) காலை 5:30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜில் என்பதும், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற இவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் என்பதும் தெரிந்தது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வக்புக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிந்துள்ளது.
ரம்ஜான் நோன்புக்காக வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்துவிட்டு சென்ற பொழுது இந்த கொலை நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விசாரணையின் முடிவில் இந்த கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் படுகொலை செய்யப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.