
நாடாளுமன்ற உரிமைக் குழுவைச் சந்தித்து விளக்கமளித்திருக்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சண்முகம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, ‘ஒன்றிணைவோம் வா’ என்ற தலைப்பில் பொது மக்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெற்றது திமுக. கிட்டத்தட்ட 1 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்ட அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனுக்களை ஒப்படைக்க முடிவுசெய்தது திமுக தலைமை. அதற்கேற்ப திமுகவின் மூத்த எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் மு.க. ஸ்டாலின்.
அந்தப் புகார் மனுக்களை எடுத்துக்கொண்டு தலைமைச் செயலகத்துக்கு திமுக எம்.பி.க்கள் சென்றனர். அவர்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதனால் அன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஐ.ஏ.எஸ்.சை சந்தித்து புகார் மனுக்களை ஒப்படைத்தனர்.
அந்த சந்திப்பின்போது திமுக எம்.பி.க்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார் சண்முகம். இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து டி.ஆர். பாலுவும், தயாநிதி மாறனும் நடந்ததை விவரித்து கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் நடந்த சம்பவத்துக்கு சண்முகம் வருத்தம் தெரிவிக்கவில்லை எனில், அவர் மீது உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டுவருவோம் என்று திமுக எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், சண்முகம் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற சபாநாயகரிடம் சண்முகத்துக்கு எதிராக உரிமை மீறல் புகார் கடிதத்தைக் கொடுத்தனர் திமுக எம்.பி.க்கள். இதுகுறித்து விசாரணை நடத்திய உரிமைக் குழுவின் முன்பு ஆஜராகி, திமுக எம்.பி.க்களும் நடந்தவற்றை விளக்கினர். சண்முகத்தை விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவரும் விளக்கமளித்திருந்தார்.
இந்தச் சூழலில், அவரை நேரில் ஆஜராக சமீபத்தில் உத்தரவிட்டது நாடாளுமன்ற உரிமைக் குழு. அதன்பேரில் நேற்று (23.09.2021) டெல்லி சென்ற சண்முகம், நாடாளுமன்ற உரிமைக்குழுவில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தைத் தந்திருக்கிறார். திமுக எம்.பி.க்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் தான் நடந்துகொள்ளவில்லை என்றும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை தந்ததாகவும், அவர்களுக்கு அந்த பதில் திருப்தியில்லை என்பதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சண்முகம் விளக்கமளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.