2019- ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை, தேர்வுசெய்து லோக்மாத் மீடியா குரூப் விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர் சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆவார்.
இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கவுரவிக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாம் அங்கம் வகிக்கும் காலகட்டத்தில், ஜனநாயகத்தின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பவார் மற்றும் சுபாஷ் காஷ்யப் உள்ளிட்ட 11 பேரை உள்ளடக்கிய தேர்வுக்குழு, இந்த முடிவை எடுத்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பிக்கிறார். வருகிற டிசம்பர் 10-ந்தேதி டெல்லியில் உள்ள ஜன்பத் பகுதியில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வைத்து மாலை 07.00 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளது.
தி.மு.க.வில் மிகச்சிறந்த பேச்சாளராகவும், மாநிலங்களவையில் மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து குரலெழுப்புபவராகவும் இருந்துவரும் எம்.பி. திருச்சி சிவா, இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவதை அறிந்து, தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.