நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.