அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கூடுதலாக கனிமவளத் துறைக்கு பொறுப்பேற்றிருந்தார். அப்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் பூத்துறை கிராமத்தில் செம்மண் அள்ளுவதற்கான குவாரி அமைக்கப்பட்டது. உறவினர் ஒருவரின் மூலமாக டெண்டர் எடுத்து அதனை பொன்முடி நடத்திய குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக வழக்கு ஒன்று 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி அவருடைய மகன் கௌதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய எட்டு பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் சாட்சி விசாரணை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 9 சாட்சிகளாக இருந்த அதிகாரிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த நிலையில், அரசு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியம் அளிப்பார்கள் என கேள்வி எழுப்பி இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன்னையும் வழக்கில் சேர்ந்து கொள்ளும்படி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் தற்பொழுது இன்று அவருடைய வழக்கறிஞருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.