நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் சென்னையில் மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் இன்று (08.04.2024) தொடங்கி உள்ளன. இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 11 ஆயிரத்து 369 மாற்றுத்திறனாளிகள், 63 ஆயிரத்து 751 முதியவர்களிடம் வாக்குகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தனது இல்லத்தில் தபால் வாக்கை செலுத்தினார். இந்த தகவலை வட சென்னை நடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.