கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாத்தனூர் பகுதியில் கடந்த மாதம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் லாரியில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 350 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமான நபர்களை தேடி வந்தனர். இதில் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன், விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இப்ராஹிம் சுகர்னா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் சுகர்னா மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன.
இதனை தொடர்ந்து மீண்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார் சுகர்னா. அதைத்தொடர்ந்து கள்ளச்சந்தை தடுப்புக்காவலில் இவரை கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சாந்தி, கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரன் குராலா அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட அதன்பேரில் தடுப்புக்காவலில் காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இப்ராஹிம் சுகர்ணா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.