தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன்(88) இன்று (23-12-23) காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.எம். ராஜேந்திரன் உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர். அந்தச் சமயத்தில் 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் 1999 ஆம் ஆண்டு ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதிலும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது, தலைமைச் செயலாளரான எம்.எம். ராஜேந்திரன் 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சரான பின்னும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்துப் பணியாற்றினார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர் எம்.எம். ராஜேந்திரன். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.