கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.
2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.