கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
எம்ஜிஆர் உருவாக்கிய போது 18 லட்சம் அதிமுக உறுப்பினர்கள். ஜெயலலிதா வந்தவுடன் ஒரு கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள். எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் 2 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக அஇஅதிமுக மாறியுள்ளது. இந்திய அளவில் தேசியக் கட்சிகளுக்கு இணையாக இருக்கும் ஒரு கட்சி என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான். இன்றைக்கு இருக்கும் திமுக அரசு பொய்யை மட்டுமே சொல்லி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். அப்பா, மகன், மகள் என பொய்களைச் சொல்லி ஒருவர் 75 சதவீதம், மற்றொருவர் 90 சதவீதம் என பொய்யைச் சொல்லி மட்டுமே வாக்குகள் சேகரித்தனர்.
ஆனால் தேர்தலின் போது சொன்ன 5 சதவீதத்தை நிறைவேற்றினால் போதும்; அதைக்கூட நிறைவேற்ற முடியாத திமுக அரசு மகளிர்க்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு பாதி பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் முதியோர்களுக்கும் விதவைகளுக்கும் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதுபோன்று முதியோர் உதவித் தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் அதிமுக ஆட்சியில் ஒரு பெண் மரணம் அடைந்ததை அரசியல் செய்த திமுகவினர், இந்த ஆண்டு மட்டும் 12 பேர் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டனர். தற்பொழுது அவர்கள் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசு தான் இந்த திமுக அரசு.
குட்கா பொருட்களை விற்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தவர் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த திமுகவில் உள்ள கொங்கு மெஸ் மணி. இவரது வீட்டு அருகில் 14 டன் குட்கா பறிமுதல் செய்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்தது அதிமுக அரசு. ஆனால் தற்பொழுது இருக்கும் திமுக ஆட்சியில் கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக டிஜிபிஏ சொல்லி உள்ளார். சாராயம் கஞ்சா தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறி வருகிறது” என்றார்.