கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இது தொடர்பான கள்ளக்குறிச்சி காவல் நிலைய வழக்கு, கச்சிராபாளையம் காவல் நிலைய வழக்கு என இரு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாகக் கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, சாகுல் ஹமீது, ஜோசப் ராஜா, மாதேஷ், சக்திவேல், கந்தன், ராமர், கண்ணன், சிவகுமார், கதிரவன், அய்யாசாமி, தெய்வீரா என்கிற தெய்வீகன், ஹரி முத்து, ரவி, செந்தில், அய்யாசாமி, ஏழுமலை மற்றும் சதீஷ் உட்பட 21 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான மேலும் ஒரு வழக்கு மூன்றாவதாக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சங்கராபுரம் காவல் நிலைய வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவதாக ஒரு வழக்கு சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் சங்கராபுரம் காவல் நிலைய வழக்கில் மேலும் ஒருவர் தற்போது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்