சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சோதனையிட்டு கோயிலுக்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக புகழ் பெற்ற கோயிலாகும் இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் எந்த வித பரிசோதனை மின்றி உள்ளே சென்று வருகிறார்கள். தமிழகத்தின் ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவைகளில் மருத்துவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள். அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் மருத்துவர் குழுவை நியமித்து சோதனையின் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கலாம் என்று கடலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்புடன் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், வெளிநாட்டு பயணிகள் தமிழகத்தில் பல சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்களுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் இந்திய விமான நிலையங்களில் இறங்கும்போது வைரஸ் நோயின் தாக்கம் ஆரம்பநிலையில் இருந்திருக்கலாம் அப்போது நடந்த ஆய்வில் நோயின் அறிகுறிகள் சரியாக தெரிந்திருக்காது. தற்போது அவர்கள் தமிழகத்தின் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். வெளிநாட்டினர் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் அதிக மக்கள் கூடும் இடங்களான சுற்றுலா தளம், கோயில்களுக்கு செல்லும் போது மருத்துவர் குழு ஆய்வு செய்து அனுப்பினால் பொது மக்களுக்கு அச்சம் தீரும் என்றார்.