ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கோவையில் ஆயுதப்படை காவலர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை சிறைச்சாலை மைதானத்தில் அரசு சார்பில் போடப்பட்டுள்ள பொருட்காட்சி நடந்துகொண்டிருந்த சூழலில் அங்கு காவல்துறையினர் பயன்படுத்தும் சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. விருதுநகரை சேர்ந்த காளிமுத்து என்ற ஆயுதப்படை போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தார். நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் காவலர் காளிமுத்து தன்னுடைய துப்பாக்கியால் வயிற்று பகுதியில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இரவு சுமார் ஒரு மணியளவில் காவலர் காளிமுத்து உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக கோவை பந்தய சாலை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் காளிமுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சில தினங்களுக்கு முன்புதான் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆன்லைன் ரம்மி, பிட்காயின் உள்ளிட்ட மோசடிகள் குறித்தும், குறிப்பாக மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தையும், உயிரையும் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனவே விழிப்புடன் செயல்பட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.