திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திறமையான நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்களின் முதலாமாண்டு விழாவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூரில் தனியார் மண்டபத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் முதலாமாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா கலந்துகொண்டார். இதில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நாட்டுப்புற பாரம்பரியமிக்க நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், காளி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அரங்கேற்றப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையான வீட்டுமனை பட்டா, நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வைப்பதற்கான இடவசதி, மாவட்ட அளவில் வழங்கப்பட்டுவரும் விருதை அதிகப்படுத்த வேண்டும், திருவாரூர் மாவட்ட சிறப்புமிக்க திறமையான நாட்டுபுற கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு கலைமாமணி விருது தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவிதொகையை உயர்த்தி வழங்கிய தமிழகரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.
இது குறித்து கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனர் கிங்பைசல் கூறுகையில்," இது போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். நலிந்து வரும் கலைஞர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதுபோல தமிழகம் முழுவதும் நிறைய இருக்கிறார்கள் அவர்களையும் தமிழக அரசு இனம்கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். பாரம்பரியம் கொண்ட கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் அரசு உதவி செய்து அழிவிலிருந்து மீட்க முன்வரவேண்டும். குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சாதிகளைக் அழித்தொழிக்க சமத்துவபுரம் கொண்டுவந்து மனிதத்தை உண்டாக்கினார் அதுபோல் ஒவ்வொரு தாலுகாவிலும் கலைஞர்களுக்கு என தனிக் குடியிருப்புகள் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும்." என்றார்.