தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.8.2023) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.08.2023) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொருளாதார வளர்ச்சிக்கு, அரசுத் திட்டங்கள் மட்டுமில்லாமல், வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்ற பல்வேறு கடனுதவிகள் எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அத்தகைய கடனுதவிகள் வழங்குவதில், குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னால், நிலுவையில் இருக்கின்ற சாலைப் பணிகளை முடித்து, மக்களுடைய இன்னல்களை போக்கவேண்டும். எனவே, ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், விரைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் எல்லாப் பணிகளையும் முடிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு உரிய தயாரிப்புடன் வந்து, இறுதி வரை ஆர்வத்தோடு பங்கேற்று உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக சொல்லி, பல்வேறு கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்ட அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
தொடர்ந்து மக்களிடம் சென்று, அவர்களோடு இருந்து அவர்களின் பிரச்சனைகளை சரி செய்து, தேவைகளை நிறைவேற்றி, நமது அரசுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உரிய மனநிறைவு கிடைக்கும் வகையில் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட அலுவலகங்களும் தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம். நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் என்பதை மனதில் வைத்து செயலாற்றுவோம்” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, அரசு துறைச் செயலாளர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.