சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுப் பதம் பார்த்த மழை அடுத்து தனது உக்கிரத்தை தென்மாவட்டங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. வறட்சியான பகுதி, செழிப்பான பகுதி என்று வஞ்சகம் வைக்காமல், நீக்கமற டிச 16,17 ஆகிய நாட்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்ததன் விளைவு தென்மாவட்ட மக்களை வீட்டைவிட்டு வெளியே வர விடாத அளவுக்கு, முடக்கிப் போட்டு இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் சுழல் காற்றானது மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகம் வரை வீசக் கூடும் என்றும் அதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் மேற்படி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 400 விசைப்படகு மீனவர்கள், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அனைத்துப் படகுகளும் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
24 மணி நேரம் நான்ஸ்டாப்பாகக் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக மாவட்டங்களின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. அடைமழையினால் பாபநாசம், சேர்வலாறு அணைக்குத் தொடர்ந்து அதிக நீர்வரத்து காரணமாக தாமிரபரணி ஆற்றில் 47 ஆயிரம் கன அடி நீர் (சுமார் 2 டி.எம்.சி) திறக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக ஆங்காங்கே இணையும் நீரால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாக இருக்குமாறு கரையோர மக்கள் 2.18 லட்சம் பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டன. ஆனால் அடைமழை மற்றும் பிற அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த நீருமாகச் சேர்ந்து சுமார் 1 லட்சம் கன அடி நீராக (சுமார் 6 டி.எம்.சி.) அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கைலாசபுரம், வெள்ளங்கோயில் மற்றும் வழியோரப் பகுதியான செய்துங்கநல்லூர் போன்ற பகுதிகளிலும் தாமிரபரணியின் வெள்ளம் புகுந்து வெள்ளக்காடானது.
தூத்துக்குடி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மீட்புப் பணிக்காக கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டர்கள் அங்கு நிறுத்தப்பட முடியாத நிலை உருவானது. அதனால் அந்த ஹெலிகாப்டர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட கஜாய் போர்கப்பலின் தளத்தில் தயாராக நிறுத்திவைக்கப்பட்டன. தொடர்மழையால் தூத்துக்குடியின் திருச்செந்தூர் ரோடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நெல்லை சந்திப்பு பஸ்நிலையச் சுற்றுப்புறச் சாலைகள், புதிய பஸ்நிலையம், மார்க்கெட் பகுதிகளில் வெள்ளநீர் நிறைந்து காணப்பட்டன. நெல்லை டவுனில் பெரிய தெருவில் மழைநீர் முழங்கால் அளவுக்குச் சென்றதால் அந்த ஏரியாவாசிகளால் வெளியே வரமுடியாத நிலை. மேலும் அங்குள்ள இரட்டைப்பிள்ளையார் கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கேம்பலாபாத் நகரின் 3வது ப்ளாக் மற்றும் அதன் தொடர்ச்சியான தெருவில் தாமிரபரணி வெள்ளம் புகுந்துவிட மார்பளவு தண்ணீரில் தத்தளித்த மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்தனர். போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் தங்களின் நிலையை அவர்கள் வெளிப்படுத்த முடியாமல் உதவிகேட்டுத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பசியால் வாடுவதாகவும் முகநூல் போன்ற சோசியல் மீடியாக்களில் தங்களைக் காப்பாற்றுங்கள் என்று பதறியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுக்க, குற்றாலம் நகரின் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டதால் குற்றாலம் டவுன்ஷிப் ஏரியா முடங்கியது. சீசனுக்காக வந்த ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
பாபநாசத்தின் மேலே உள்ள அகஸ்தியர் அருவியில் காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்ததால் தாமிரபரணியாறு பெருக்கெடுத்தது. ஊரெல்லாம் மழை கொட்டினாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஏரியா வறட்சியாகத்தானிருக்கும். ஆனால் கொட்டித் தீர்த்த இந்த மழையினால் சாத்தான்குளம் ஏரியாவில் தண்ணீர் வெள்ளமாய்த் திரண்டது. பஜார் மற்றும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக வெள்ளமாகப் பிரவாகமெடுத்த மழை அதனையொட்டியுள்ள மாஞ்சோலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டது. கடந்த வருடம் பெய்த வடகிழக்குப் பருவமழை கூட மேக்சிமம் 44 செ.மீ பெய்த நிலையில், தற்போது தென்மாவட்டத்தில் பெய்த மழை, வரலாறே காணாத அளவில் 95 செ.மீ. அளவு பெய்ததுதான் உச்சம். அதன் காரணமாக வெள்ளம் பிரவாகமெடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழைப் பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிற சேர்வலாறு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற பெரிய அணைகள் அபரிமிதமான நீர்வரத்து காரணமாக வேகமாகக் கொள்ளளவை எட்டிய நிலையிலும், அணைகளுக்கான நீர்வரத்தின் கனஅடி நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து கொண்டே போக, அணைகளின் பாதுகாப்பின் பொருட்டு வருகிற கன அடித் தண்ணீர் மொத்தத்தையும் அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம். ஆரம்ப கட்டத்தில் மலையிலுள்ள நான்கு அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு 27 ஆயிரம் கன அடி என்ற போதிலும், போகப் போக அணைகளுக்கும் வருகிற தண்ணீரின் கன அடியின் அளவு அதிகமாக, வெளியேற்றப்படுகிற தண்ணீரின் அளவு ஒரு லெவலுக்கு மேல் ஒரு லட்சம் கன அடியாக (6 டி.எம்.சி) உயர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் தாமிரபரணி வெள்ளம் தரையிறங்கி கடல் போன்று சீறிப்பாய்ந்திருக்கிறது. அப்படி கட்டு மீறி பொத்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்து சென்ற நிலையில், வழியோரங்களில் சேருகிற காட்டாற்று வெள்ளம், ஏரியாவில் உடைந்து போன குளங்களின் தண்ணீர் என அனைத்துமாய் ஒன்று சேர, கற்பனைக்கும் எட்டாதவாறு 1.5 லட்சம் கன அடி அளவாக உயர்ந்து கடல் போன்று கொதிப்பில் சீறிப்பாய்ந்து, முக்கூடலில் சங்கமித்து பின் வழக்கம் போல் நெல்லையின் கொக்கிரகுளம் பகுதிக்குத் திரண்டிருக்கிறது.
இதனால் தாமிரபரணி கரையையும் மீறி எல்லை தாண்டியதால் கொக்கிரகுளம், ஜங்ஷன், வண்ணாரப்பேட்டை, மீனாட்சிபுரம், கைலாசபுரம் உள்ளிட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவி மார்பளவு தண்ணீராய் மூழ்கடித்ததால், பீதியான மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் தஞ்சைமடைந்து அபயக் குரலெழுப்பியிருக்கிறார்கள். நெல்லை மாநகரம் துண்டிக்கப்பட்ட தனித்தீவானது மட்டுமல்ல இப்படி சீறிப்பாய்ந்த தாமிரபரணி வழக்கமான தன் வழியான சீவலப்பேரி வழியாக மருதூர் ஸ்ரீவைகுண்டத்திற்குப் பாய்ந்திருக்கிறது. அப்படிச் செல்கிற போது வழியோர நீர் நிலைகளின் உபரித் தண்ணீரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு பாய்ந்ததில் ஸ்ரீவைகுண்டத்தின் வழியான செய்துங்கநல்லூர் புதுக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கிறது.
இதனிடையே அந்த ஊரின் வழியாக திருச்செந்தூர் ஆலய தரிசனம் செல்கிற கர்நாடகாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும், பிற வாகனங்களும் சிக்கித் தவிக்கலாகின. இப்படி பிரவாகமெடுத்துப் பாய்கிற தாமிரபரணி ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏரல் வழியாக கடலின் முகத்துவாரமான புன்னக்காயலிலுள்ள கடலோடு சங்கமிக்கிறது. நெல்லை ஜங்ஷனில் மக்கள் குடியிருப்புகளை பதம் பார்த்த வெள்ளம் நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையப் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளிலும் முக்கால்வாசி உயர்ந்து கடைகளை மூழ்கடிக்க, அவைகளிலுள்ள பொருட்களும் சேதமாகின. வெள்ளப் பாய்ச்சலினால் ஏற்படுகிற பாதிப்பு உயர்ந்து கொண்டிருப்பதையறிந்த பிறகே மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அணைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
தென்மாவட்டத்தின் நிலையைக் கண்ட முதல்வர் ஸ்டாலின் மக்களின் மீட்பு அவர்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த மேலும் அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, ஏ.வ.வேலு, ராஜகண்ணப்பன் போன்றவர்களை நியமித்தார். அன்ன ஆகாரமின்றி குளிரில் மொட்டை மாடிகளில், வீடுகளில் தவிக்கும் மக்களை மீட்கவும் அவர்களுக்கான உணவுவகைகளைக் கொண்டு சேர்க்கவும் ஏற்கனவே பேரிடர் மீட்பு படைகளும், தன்னார்வலர்களும் துரிதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க அதிகப்படியான பேரிடர் மீட்பு படையினர் எமெர்ஜென்சியாய் வரவழைக்கப்பட்டு நெல்லை மாநகர் பகுதி மக்களை மீட்டும், அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வெள்ளத்தைக் கடந்து வீடு வீடாக படகுகள் ரப்பர் டியூப்கள் மூலமாக விநியோனம் செய்து மக்களை பாதுகாப்பான மையங்களில் சேர்த்து வருகின்றனர்.
வெள்ளத்தோடு எதிர்நீச்சல் போட்டவாறு மீட்பு பணிகள் வேகமெடுக்க திருச்செந்தூரிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை புறப்பட்ட ரயில், தாதன்குளத்தில், வெள்ளத்தால் மணல் அரிக்கப்பட்டு ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குவதாக சிக்னல் கிடைக்க ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. ரயில் நிலையத்தைச் சுற்றி 10 அடி உயரத்திற்கு வெள்ளம் முற்றுகையிட்டிருப்பதால் மீட்பிற்காக அவர்களை நெருங்க முடியாத சிரமம். உணவு தண்ணீரின்றி குளிரில் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை படகு முயற்சி சாத்தியப்படாது, ஹெலிகாப்டர் போன்றவைகளால் மட்டுமே இயலும் என்று சென்னையில் ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு மீட்பு பணிகள், நிவாரண உதவிகளைத் துரிதப் படுத்திக் கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தெரியவர, உடனே உதயநிதி ஸ்டாலின் கோவையின் சூலூர் விமானப் படையகத்தைத் தொடர்பு கொண்டு நிலைமையைத் தெரிவிக்க, ரயில் பணிகளை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள், மற்றும் மீட்பு படையினரும் அங்கிருந்து விரைகின்றனர். மேலும் அவரின் முயற்சியால் கொச்சியிலிருந்து மீட்புப் பணிக்காக பாளையிலுள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கப்பற்படைத் தளத்திற்கு ஹெலிகாப்டர்களும் வந்திறங்கியுள்ளன. இதன் மூலம் ரயில் பயணிகளை மீட்டு பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வாஞ்சி மணியாட்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
நெல்லை டவுண், ஜங்ஷன், பேட்டை, மானூர் மற்றும் சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம், மின்சாரம் தாக்குதல் காரணமாக 10 பேர் பலியானார்கள். நெல்லை டவுணின் 24வது வார்டில் மட்டும் 6 வீடுகள் வெள்ளம் காரணமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இரவு பகல் பாராது மீட்பு பணிகள் வேகமெடுக்கின்றன. தென்மாவட்ட வரலாறு காணாத கனமழை, மக்களை திணற வைத்துவிட்டுப் போயிருக்கிறது.