வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு தோன்றுகின்றது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கின்றது.
ஜவ்வாதுமலை, ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு ஆகிய மலைப்பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திரக்காவிரி ஆற்றிலும் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் ஒடுகத்தூர் ஆற்றை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரக்கூடும் எனவும் இதனால் தடையின்றி பாசன வசதி பெற்று விவசாயம் செழிக்கும் எனவும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் உத்தர காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் எடுக்கப்பட்டு ஆற்றின் நடுவே மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. தற்போது ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை பார்த்தவுடன் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், கவனமுடன் இருக்கவும் வலியுறுத்தப்படுகிறது.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தங்களது குழந்தைகளைப் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தண்ணீரைப் பார்க்க அனுமதிக்க கூடாது என்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தப்படுகிறது.