கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வர நீர்வளத்துறை தடைவிதித்துள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை நிலவரம் படி பவானிசாகர் அணைக்கு 4,938 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.105 அடி கொண்ட இந்த பவானிசாகர் அணையில் நேற்று காலை நிலவரப்படி வரை 93.86 அடியை எட்டியுள்ளது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை,காளிங்கராயன் வாய்க்கால்களில் பாசனத்திற்காகவும் மற்றும் பவானி ஆற்றில் குடிநீருக்கு என மொத்தம் 1055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இன்று முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து நீர்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பவானி ஆற்றங்கரையில் யாரும் துணிகள் துவைக்கவும், கால்நடைகளும் மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நீர்வளத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.