மேட்டூர் அணை நிறைந்துவருவதால் 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 65 கன அடியாக இருந்து வந்த நிலையில் தற்போது 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.11 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 90.48 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. தற்போது அதிகரித்துள்ள நீர்வரத்தால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளதால் 16 கண் மதகு வழியே உபரி நீர் திறக்கப்பட்டு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரிக் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர் உட்பட 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தமுறை மேட்டூர் அணை நிரம்பினால் இதுவரை 40 வது முறையாக மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதாக பதிவாகும்.