கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி கடந்த 13 ஆண்டுகளாக இயங்கியது. பின்னர் போதிய மணல் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக குவாரி மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி மணல் குவாரி இயங்க தொடங்கியது. அங்கிருந்து அள்ளப்படும் மணல் லாரிகள் மூலம் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஏரிப்பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் அந்த குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கும் மேலாக மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் 24-ஆம் தேதி முதல் குவாரியில் மணல் அள்ளும் பணி துவங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க, த.வா.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இன்று எனதிரிமங்கலத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முழுக்கங்கள் எழுப்பினர்.