மீனவர்கள் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மீண்டும் நாகை மீனவ கிராமங்கள் பதற்றமடைந்துள்ளன.
சுருக்குமடி வலை விவகாரம் குறித்து இரவு 10 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 35 மீனவ கிராமங்கள், சுருக்குமடி வலைக்குத் தடை என்ற அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சுருக்குமடி வலைக்கு ஆதரவான 15 கிராமங்களுக்கும் 25 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுருக்குமடி வலை விவகாரம் பல ஆண்டுகளாகவே பூதாகரமாகியிருக்கிறது. சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க வலியுறுத்தி சில கிராமங்களும், அனுமதிக்கக் கூடாது என்று பல கிராம மீனவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசோ சுருக்குமடி வலையைப் பயன்படுத்தகூடாது என்றும் அதனால் மீன்வளம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்குறியாகிவிடும் என்றும் அனுமதி மறுத்துள்ளது.
இருதரப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கும் இடையே நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தலைமையில் மீனவ பிரதிநிதிகளுக்கான சுமுக பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு நாகை மாவட்டத்தில் உள்ள 55 மீனவ கிராமங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 50 கிராமங்களைச் சேர்ந்த 120 மீனவ பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். ஜூலை 16 ஆம் தேதி இரவு 10 மணிவரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தும், சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் 35 மீனவகிராம நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால் 13 மீனவ கிராம பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கிராமங்களுக்கு வருகின்ற ஜூலை 21ஆம் தேதி முதல் 25 நாட்களுக்குள் சுருக்குமடி வலைகளை ஒப்படைப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நாகை மாவட்ட 55 மீனவ கிராமங்களில் 5 கிராமங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் நாகை நம்பியார் நகர் மற்றும் சாமந்தான் பேட்டை ஆகிய இரண்டு கிராமங்கள் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமுக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் மீனவ கிராமங்கள் மீண்டும் பதற்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.