கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், " நான் மீனவர் ஒருங்கிணைப்பாளர் சங்க செயலாளராக உள்ளேன். ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கேரளத்தில் உள்ள முனான்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓசியானிக் மற்றும் ஆமேன் ஆகிய படகுகள் மூலம் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஜெசுபாலன்,ராஜேஷ் குமார், ஆரோக்கியராஜ்,யாக்கப்,யுகா,சாளு,எட்வின், சகாயராஜ்,மற்றொரு சகாயராஜ்,வர்ஷன், மரியராஜன்,சிவன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் உட்பட 14 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு 2 மணியளவில் இரண்டு படகுகளுக்கு இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இரு படகில் உள்ளவர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் மற்ற மீனவர்களிடம் இருந்து ஒரு தகவல் கிடைக்கிறது. ஆகஸ்ட் 6 ல் ஓசியானிக் படகு மீன்பிடித்து கொண்டிருந்த போது இந்திய மீன்பிடி கழகத்திற்கு சொந்தமான தேஷ் சக்தி என்ற கப்பல் ஓசியானிக் மீன்பிடி படகு மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது மற்றொரு படகில் இருந்தவர்கள் ஓசியானிக் படகில் இருந்த இருவரை மீட்டுள்ளனர். தகவல் அறிந்தவுடன் மீனவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்ற சென்றனர். அப்போது யுகா, சகாயராஜ் என்ற மீனவர்களின் இறந்த உடலை மீட்டனர். ஆனால் மற்ற 9 மீனவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்ககோரி தமிழக, கேரளா அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள மீனவர்கள் விவரம்.ஜேசுபாலன்,ராஜேஷ் குமார், ஆரோக்கியராஜ்,சாளு,எட்வின், எஸ்.சகாயராஜ், வர்ஷன், மரியராஜன்,சிவன் ஆகிய காணாமல் போன மீனவர்களில் 8 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இந்த 9 மீனவர்களையும் மீட்க வேண்டும். இதில் ராமன்துரை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 7 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். இந்திய மீன்வளதுறையின் தேஷ் சக்தி என்ற கப்பல் மோதிய பிறகு சேதமடைந்த மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்காமல் அவர்கள் உடனடியாக சென்றுவிட்டனர்.
மேலும் நவீன உபகரணங்களை பயன்படுத்தி காணமல் போன மீனவர்களை உயிருடன் அல்லது பிணமாக மீட்க வேண்டும். ஆழ்கடலில் நீந்துபவர்களின் உதவியுடன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை நடத்தவேண்டும். எனவே இதுவரை 9 மீனவர்களை உடனடியாக மீட்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வழக்கறிஞர் இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கினை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.