கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன் (வயது 42), அமுது (வயது 48), சக்திவேல் (வயது 50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் மாயமாகியுள்ளார். மேலும் கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (31.102023) சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகி பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜி ரமேஷ்பாபு தெரிவிக்கையில், “உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும், படகு சேதமடைந்ததற்கு நிவராணம் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.