கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சியில் மாரிமுத்து அம்மாள் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் கடந்த 1998-ஆம் ஆண்டு சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மீன் பிடிக்கும் போட்டியில் வெற்றி பெற்றதால் அவருக்கு இரண்டு மீன் குஞ்சுகள் பரிசு வழங்கப்பட்டது. இதனை முதலில் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்து வளர்த்து வந்த அவர் பின்னர் மீன் தொட்டி என கடந்த 21 ஆண்டுகளாக அந்த இரு மீன்களையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அந்த இரு மீன்களும் மீன் தொட்டியில் இறந்து மிதந்துள்ளதை பார்த்து குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், இந்த மீனை நான் பெற்றதிலிருந்து இதுவரை 8 வீடுகள் மாறியுள்ளோம். தற்போது இந்த வீட்டில் எட்டு வருடங்கள் வாழ்ந்து வருகிறோம். அவ்வளவு பத்திரமாக இந்த இரு மீன்களையும் குழந்தை போல் வளர்த்து வந்தேன். எனக்கு மனது சரியில்லாத நேரங்களில் இந்த மீன் தொட்டிக்கு அருகில் உட்கார்ந்து மீன் நீந்துவதை பார்க்கும்போது மன உளைச்சல் சரியாகிவிடும். அதேபோல் நான் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது என் பேச்சைக் கேட்டால் தொட்டியில் உள்ள மீன்கள் துள்ளி விளையாடிய சத்தத்தை ஏற்படுத்தும். இது எனக்கு மன மகிழ்வை தரும்.
தற்போது திடீரென இந்த மீன் இறந்தது மிகவும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று நான் வேலைக்கு செல்லவில்லை. குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் உள்ளோம் என்றார். அவர் மேலும், வீடுகளில் மீன்களை வளர்த்து வந்தால் சோகமான நேரங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே வீடுகளில் மீன் வளர்ப்பது நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.