Skip to main content

ஆகஸ்ட்டில் 40 சதவீத கல்விக் கட்டணத்தை முதல் தவணையாக வசூலிக்கலாம்! -தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
The first installment of 40 percent tuition fees can be charged in August! -Intermediate order in case of private educational institutions

 

 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,  கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கக்கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.  

 

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தி இருந்தது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் பொதுச்செயலாளர் பழனியப்பன் உள்பட, பலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரர் சங்கங்கள் அளித்த கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, தனியார் கல்லூரிகள் வரும் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதுபோல,  தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை  75 சதவீத கட்டணத்தை மூன்று தவணைகளாக பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் 25 சதவீதம், பள்ளிகள் திறந்த பின் 25 சதவீதம், பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25 சதவீதம் என்ற அடிப்படையில் வசூலித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை பொறுத்தவரை,  தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு, இந்தாண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து, வசூலித்து கொள்ளலாம்.  

 

அதே நேரத்தில், பள்ளிக் கட்டணம் தாமதமாக செலுத்தினாலும், மாணவர்கள் மீது பள்ளிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்படும். மாணவர்கள் தண்டிக்கப்பட்டால் பள்ளிகள் மீது அரசு சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எல்லாம், தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.  அரசுக்கும் நிதி நெருக்கடி உள்ளது.

 

அதுபோல, பல்வேறு தரப்பட்ட  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தங்களது கோரிக்கையை என்னிடம் அளித்தனர். அதில் சில பெற்றோர்கள், கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அரசை பொறுத்தவரை, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள  வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதுபோல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகம் வழங்க வகை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர்,  அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், இந்த ஆண்டு, ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதையும் சேர்த்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

 

The first installment of 40 percent tuition fees can be charged in August! -Intermediate order in case of private educational institutions

 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பின்வருமாறு -  

 

கரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய - மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கரோனா தொடர்கிறது இதன் தாக்கம் எப்போது குறையும் என்று  தெரியாத நிலை உள்ளது.

 

அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. எனவே,  அரசு அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.

 

கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கினால்தான், அரசு  உதவி பெறாத கல்வி நிறுவனங்களால் செயல்பட முடியும் எனக்  கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. அதேநேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. கல்லூரிகளுக்கு 3 தவணைகளிலும், பள்ளிகளுக்கு 75% கட்டணத்தையும் வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

 

25% முதல் தவணையை இப்போதும்,  மற்றும் 25% இரண்டாம் தவணை தலா பள்ளிகள் திறக்கும்போதும் வசூலிக்கலாம் என அரசு சொல்கிறது. ஆனால், பள்ளிகள் எப்போது திறக்கும் எனத் தெரியாத நிலை உள்ளது. அதனால், அரசு உதவி பெறாத அனைத்து கல்லூரிகள், பள்ளிகள்,   2020-21 ஆண்டுக்கான முதல் தவணையை 25%க்கு பதிலாக 40% ஆக, ஆகஸ்ட் 31-க்குள் வசூலிக்கலாம். மீதமுள்ள 60 சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம். இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (கல்லூரி + பள்ளி) பொருந்தும்.

 

கட்டண நிர்ணய குழு கட்டண நிர்ணய நடைமுறையைத் துவங்கி,  ஆகஸ்டில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரக்கூடாது.

 

பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை,  அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்