கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திமுக பிரமுகரை சரமாரியாக சுட்ட கும்பல் தப்பியோட முயன்ற நிலையில் சிலர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது மணவாளநல்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். இவருடைய மகன் இளையராஜா. இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இளையராஜா செங்கல் சூளையில் இருந்து காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ராஜசேகரின் மகன்கள் ஆடலரசு, புகழேந்தி ராஜா உள்ளிட்ட இன்னும் சிலர் சேர்ந்து கொண்டு துப்பாக்கியால் இளையராஜாவை சுட்டுள்ளனர்.
காயமடைந்த இளையராஜா உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்த நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பெயரில் இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்தநிலையில் ஆடலரசு, புகழேந்தி ராஜா உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவரை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.