விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கனிஷ்கர் என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று மதியம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் போது அருகில் இருந்த கனிஷ்கர் பட்டாசு ஆலைக்கு சொந்தமான பட்டாசு கடையில் பட்டாசு துகள் ஒன்று விழுந்ததால் பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டது.
அப்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யபாரதி, மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சுந்தர மூர்த்தி, போர்மேன் கனகராஜ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முறையாக வெடி மருந்துகளை பயன்படுத்தாதது, பாதுகாப்பான முறையில் வெடிகளை தயாரிக்காதது, பட்டாசுகளை முறையாக பரிசோதனை செய்யாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.