கடலூர் மாவட்டம் நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதியில் சீனு என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பழக்கடை குடோனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலி செய்துள்ளனர். ஆனால் கடையில் பயன்படுத்திய பழங்களை எடுத்துச் செல்லும் பெட்டிகள், மரத்தால் ஆன அலமாரிகளைக் கொண்டு செல்லாமல், அங்கேயே வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாகப் பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் வான் உயரத்துக்குப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பழங்களை வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள், பித்தளைப் பாத்திரங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்புள்ள பழங்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள், பித்தளைப் பாத்திரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து பழக்கடை குடோனில் எப்படி தீப்பிடித்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.