கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேட்டை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் கவியரசன். இவர் மனைவி இந்திராணி. இவர்களுக்கு 2 மாத கை குழந்தை உள்ளது.
இந்நிலையில் கவியரசனுக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் கவியரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது சம்பந்தமாக அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக இன்று மாலை கவியரசன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் மனைவி இந்திராணி மறுத்துள்ளார். மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த கவியரசன் தனது கூரை வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாக பரவியதில் கவியரசு வீடு மட்டுமில்லாமல், அருகில் இருந்த அவரது தந்தை சக்கரவர்த்தியின் வீடும் எரிய தொடங்கியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், விரைந்து வந்த, தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், சக்கரவர்த்தி மற்றும் கவியரசன் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் மின்சாதன பொருட்கள், பாத்திரங்கள், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் கவியரசு தனது மனைவியைத் தாக்கியதால், அவருக்கு காயங்கள் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.