விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் ஒரு குடும்பமே சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும், வெளி மாநில லாட்டரி சீட்டுகளை மறைமுகமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் இருப்பதால், அங்குள்ள தினசரி குலுக்கல் லாட்டரிகளில் 1-ல் இருந்து 9 வரையிலான எண்களில் கடைசி மூன்று நம்பா்களை மட்டும் குறிப்பிட்டு 50-ல் இருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
இந்த நம்பா் லாட்டரியில் ஆசிரியர்கள், அரசு ஊழியா்கள், கட்டிடதொழிலாளா்கள், நகைக்கடை ஊழியா்கள் என பலா் அடிமையாகி இருக்கிறார்கள். இந்நிலையில், வெட்டூா்ணிமடத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் தடை செய்யப்பட்ட கேரளா, நம்பா் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த கடையில் லாட்டரி சீட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையில் இருந்த ஊட்டுவாழ்மடத்தை சோ்ந்த விக்னேஷ் பாண்டியன், பூதப்பாண்டியை சோ்ந்த அருண், கிருஷ்ணன் கோவிலை சோ்ந்த சுரேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனா். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மற்ற ஏஜென்டுகளை தேடிவருகின்றனர்.