புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி செந்தில் (45). அவரது மகள் செந்தமிழ்செல்வி (15) கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து 295 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று மீண்டும் அதே அரசு பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பம் கொடுத்துவிட்டு தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது. பின்னால் அறந்தாங்கி நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் செந்தில் மற்றும் மாணவி செந்தமிழ்செல்வி இருவரும் படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரையும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி செந்தமிழ்செல்விக்கு அடுத்தடுத்து 3 விபத்துகள் நடந்து தொடர்ந்து நடக்க முடியாத சோகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறும் போது.. மாணவி செந்தமிழ்செல்வி 5 ஆண்டுகளுக்கு முன்பு 6 ம் வகுப்பு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து சில மாதங்களில் சைக்கிளில் வீட்டுக்குச் சென்ற போது முன்னால் வந்த ஒரு கார் மோதி 10 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அந்த விபத்தில் செந்தமிழ்செல்வி இடுப்பு எழும்புகள் உடைந்து 2 வருடங்கள் வரை படுத்தபடுக்கையாக கிடந்தார். வறுமையில் வாடும் குடும்பம். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதம் ஒரு முறை சிகிச்சைக்கு கொண்டு செல்ல கூட வழியில்லாமல் தவித்தனர்.
அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு குணமடைந்து எழுந்து அமரும் நிலை ஏற்பட்டதால் தந்தையின் துணையுடன் மீண்டும் பள்ளிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் தூக்கி வைத்து அழைத்துச் சென்று வகுப்பில் உள்ள இருக்கை வரை தூக்கி சென்றே அமர வைக்க வேண்டும். இந்தநிலையில் கடந்த ஆண்டு மறுபடியும் ஒரு விபத்து ஏற்பட்டு பழைய காயம் இருந்த இடத்தில் மீண்டும் படுகாயம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாக பல மாதங்கள் கிடந்தார்.
இந்த நிலையில் மறுபடியும் சிகிச்சை பெற்று மீண்டும் தந்தையின் உதவியுடன் பள்ளிக்கு சென்று படித்து இந்த ஆண்டு 10 ம் வகுப்பு பொது தேர்வில் 295 மார்க் வாங்கினார். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டதால் பிளஸ் 1 சேர்க்க விண்ணப்பம் கொடுத்துவிட்டு வரும் போது மறுபடியும் விபத்து எற்பட்டு சிகிச்சைக்கு சென்றுவிட்டார். பட்டகாலில் படும் என்பது உண்மையாகவே உள்ளது. இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் கடன் வாங்கி, கூலி வேலை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்பொழுது அவரது தந்தையும் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாவும் அவர்களுக்கு துணையாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை.. எப்படி அவர்களால் சிகிச்சை செலவை கவணிக்க முடியும். அதனால் அரசு உதவியும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவி செந்தமிழ்செல்வி நலமுடன் பழைய நிலையில் வீட்டுக்கு திரும்ப தேவையான அறுவைச் சிகிச்சை செய்யவும் உதவி செய்ய வேண்டும் என்றனர். ஒரு மாணவிக்கு அடுத்தடுத்து நடக்கும் விபத்து அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.