திருச்சி - சென்னை பைபாஸ் சங்கீதாஸ் ஹோட்டல் எதிர் புறம் உள்ள ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(41). இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் 3 மாடி கட்டடம் உள்ளது. இதில் தரைத்தளத்தில் அவர் கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். முதல் தளத்தில் அவரது வீடு உள்ளது. இதில் சுப்பிரமணி, மனைவி மீனாட்சி (39), மகன்கள் சுப்பையா (13), ராமநாதன் (10) மற்றும் சுப்பிரமணியனின் தந்தை சுப்பிரமணியன் ( 79), தாயார் ராமு அம்மாள் (76) தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அவரது உறவினரின் மகன் சஞ்சய்(10 ) என்ற சிறுவனும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு 12:30 மணி வரை சுப்பிரமணி கடலை மிட்டாய் தயாரிக்கும் தரைத்தளத்தில் இருந்து உள்ளார். பின்னர் முதல் மாடியில் உள்ள வீட்டுக்கு சென்று தூங்கினார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கடலை மிட்டாய் தயாரிக்கும் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தனன், முன்னணி தீயணைப்பு வீரர் தங்கபாண்டியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். இவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு கடலை மிட்டாய் நிறுவனத்தில் இருந்த எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த சிலிண்டர் பக்கவாட்டில் வெடித்ததால் சுவற்றை உடைத்துக் கொண்டு அங்குள்ள வயல்வெளியில் பாய்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் அந்தக் கட்டடத்தின் மாடி இரும்பு படிக்கட்டுகள் நிலைகுலைந்தன. மேலும் அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரையும் பறந்தது. மேலும் தீ தரைத்தளம் முழுவதும் பரவி கடும் புகைமூட்டம் மின்தடை ஏற்பட்டது. இதனால் முதல் தளத்தில் தங்கி இருந்த சுப்பிரமணி குடும்பத்தினர் புகை மூட்டத்தில் இருளில் சிக்கி தவித்தனர். அப்போது விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து சத்தியவர்த்தனன் கூறும்போது, “கடலை மிட்டாய் தயாரிப்பதற்கு பாகு காய்ச்சுவார்கள். இந்தப் பாகு காய்ந்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும் போல் இரவில் அடுப்பில் உள்ள அனலை அணைக்காமல் வைத்துவிட்டு சுப்பிரமணி சென்றுள்ளார். இது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த மரத்தூள் உள்ளிட்ட பொருட்களில் பிடித்து கடைசியாக சிலிண்டரில் பிடித்து வெடித்து சிதறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் கட்டடம் இடிந்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்” என்றார்.