தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் வரும் ஐந்தாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருங்காட்சியகத்தை தொடங்கி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், அந்தப் பகுதியில் இருந்த பனை மரங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அருகே பொன்னன்குறிச்சி என்ற பகுதியில் திடீரென நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்தபடி ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களை இங்கே வைத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான தொடக்க விழா வரும் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.