திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே வாணியன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் துணை மின்நிலையத்தில் இருந்துதான் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று (25-05-24) இந்தத் துணை மின் நிலையத்தில் இருந்த மின்மாற்றியில் திடீரென பயங்கரமாகத் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால், உடனடியாக இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையத்தில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மின்மாற்றியில் தீ பற்றிய உடனே, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.