கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது பிரிதிவிமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவரது மனைவி கொளஞ்சி (40). முருகனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அவரது மனைவிக்கு கணவர் மீது சந்தேகம் உண்டாகி, இது சம்பந்தமாக முருகனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. இது சம்பந்தமான பிரச்சனை தொடர்ந்து நீடிக்கவே, கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவுக்கு வேலைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார் முருகன்.
அப்போது மனைவியும் அவருடன் கேரளா வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் முருகன் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் முருகன் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கொளஞ்சி, தனது கணவரைக் காணாமல் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊர்களுக்கெல்லாம் சென்று தேடிப் பார்த்துள்ளார். கணவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதமே தனது கணவர் வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கொளஞ்சி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கொளஞ்சியின் புகார் மனுவை தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். தொடர்ந்து, அங்குள்ள சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று (19.08.2021) அந்தப் புகார் மீது வழக்குப் பதிவுசெய்து, காணாமல் போன முருகனை தேடி கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். முருகனுக்கும் அவரது மனைவிக்கும் ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.