வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உரிமைகளை மீட்க ஸ்டாலினில் குரல் பரப்புரை கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ க்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வால் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மத்திய அரசு மாட்டுச் சாணியையும் கோமியத்தையும் ஆராய்ச்சி பண்ணுவதற்கு ரூ.500 கோடி ஒதுக்குகிறார்கள் அதேபோன்று சமஸ்கிருத மொழிக்கு ரூ.600 கோடி ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்குகிறார்கள்
அதே போன்று மாநில அரசிடம் தான் வரி விதிக்க உரிமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்படாது என்றும், அதே போன்று பிரதமர் மோடி எங்கு சென்றாலும், தமிழ் வளர்ப்பதாக கூறி திருக்குறளைச் சொல்கிறார். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறார். இது எப்படி வளர்ச்சி ஆகும்.
மேலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட தென் மாவட்டம் மக்களை சந்திக்க வந்த தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிதி ஒதுக்கும்படி குனிந்து குனிந்து கேட்டோம். ஆனால் அவர் நிதியே ஒதுக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களில் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக தள்ளுபடி செய்தார்கள். ஆனால், அந்த நிதியை வைத்துத் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு இருக்கலாம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் வைக்கிறது” என்று பேசினார்.