நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோரும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். விசாரணையின் போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.