புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம் ஆகியோர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆறுகளில் மணல் அள்ளும் ஒப்பந்தங்களை எடுத்து வருகின்றனர். இந்த ஒப்பந்தங்களை பெற அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நன்றாக கவனிப்பதற்காக திண்டுக்கல் ரத்தினத்தின் உறவினரான கறம்பக்குடி குளந்திரான்பட்டு கரிகாலன் மாண்புமிகு ஊரிலேயே தனி வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் வரை பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகள் செய்தனர். சோதனைக்கு பிறகு ஏராளமான கோப்புகளை கைப்பற்றிய அதிகாரிகள், மிக முக்கியமான கோப்புகளை மட்டும் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு மீதி கோப்புகளை அந்தந்த வீடுகளிலேயே தனி அறைகளில் பாதுகாப்பாக வைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் வீட்டிற்கும் குளந்திரான்பட்டு கரிகாலன் வீட்டிற்கும் சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்போடு வந்த அமலாக்கத்துறையினர், வீட்டிற்குள் சென்று தனியறைகளில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் சில கோப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு உறவினர்கள் சிலரிடம் ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் எங்கே இருக்காங்க என்று விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர்.