திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான சந்திரசேகர். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும் 1 பெண் பிள்ளை, 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். பெங்களூரில் வேலை செய்து வந்த போது 26 வயதான சுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சுஜாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தேவராஜ் என்ற கணவனும், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் சுஜாவை வாணியம்பாடிக்கு அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து தங்கவைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுஜா காணாமல் போனதாக அவருடைய கணவர் பெங்களூரில் உள்ள ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுஜாவை அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் சுஜா வாணியம்பாடியில் இருப்பது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து சுஜாவை அழைத்து செல்ல அவருடைய குடும்பத்தினர் வாணியம்பாடிக்கு தேடிவந்து கண்டுபிடித்து அறிவுரைகளை வழங்கி அழைத்து செல்ல முயன்றனர். சுஜாவை அழைத்து செல்வது அறிந்து சந்திரசேகர் ஓடி சென்று அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். பின்னால் ஓடிச்சென்ற குடும்பத்தார் அவரை காப்பாற்ற முயன்றனர். இந்த தகவல் அறிந்த சுஜாவும் அழுது கொண்டே ஓடிச்சென்று அங்குள்ள மற்றொரு கிணற்றில் குதித்துள்ளார். கணவன் மற்றும் பெற்றோர் பின்னாலேயே ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றனர்.
இரு குடும்பத்தினரும் கிணறுகளில் குதித்து சந்திரசேகர் மற்றும் சுஜாவை தேடத்துவங்கினர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். 2 சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்ட உடலைப் பார்த்து அதிர்ச்சி தாங்க முடியாத சந்திர சேகரின் மனைவி, தாய் மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி கிராம போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.