சேலத்தில், பெண் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மேட்டூர் மைக்கேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட சபரி. மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நர்மதா (37). மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றியவர், கடந்த சில நாள்களாக தேர்தல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச் 24ஆம் தேதி தூக்க மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு, மார்ச் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார்.
சேலம் 5 சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று இரவு 10 மணியளவில் மேட்டூர் திரும்பினார். வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது, கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று எழுந்து அறைக்குள் சென்ற நர்மதா, கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் துப்பட்டாவில் தூக்கிட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மேட்டூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருவாய்த்துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.