தேனி மாவட்டத்தில் உள்ள 336 அங்கன்வாடி உதவியாளர்கள், 362 குறு அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் 22 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 720 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்படி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களில் பெறப்பட்ட விண்ப்பங்களை ஆய்வுசெய்தனர் அதன்பின் எட்டு வட்டாரங்களில் உள்ள பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணியிடம் கிடைக்காத பலர் மாவட்ட அலுவலகத்தில் மனு கொடுத்தும் வருகிறார்கள்.
இந்தநிலையில்தான் கம்பம் வட்டாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிட்டதை மட்டும் ஒயிட் மார்க் வைத்து முறைகேடாக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி மீது புகார் வந்தது அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் விஜயலட்சுமி தான் விண்ணப்பங்களில் முறைகேடு செய்து இருக்கிறார் என தெரியவந்ததின் பேரில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியான விஜயலட்சுமியை அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்தார். அதோடு அந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடமும் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் அரண்டு போய் விட்டனர்.