கல்லூரியில் பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணையை மீண்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நூதன்சேரியைச் சேர்ந்த செல்வி என்பவர் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் கடந்த 22 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இக்கல்லூரியில், கடந்த 2013-ம் ஆண்டு முதல்வராக இருந்த முகமது இக்பால் என்பவர், செல்வியை சாதியைக் கூறி அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தான் கொடுத்த புகாரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் காவல்துறை செயல்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களில் கல்லுரி முதல்வருக்குத் தொடர்பில்லை எனக் கூறி ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த வழக்கை காவல்துறை உதவி ஆணையருக்கு இணையான அதிகாரிகளிடம் மாற்றி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் காவல் துறையின் உதவி ஆணையருக்கு இணையான அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.